தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் தனது 24-வது படத்திலும், ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடனான சந்திப்பின்போது அவர் சொன்ன விஷயங்களை சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அது குறித்து அவர் கூறியதாவது;
“நடிகர் அமீர்கானை சிலமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் என்னிடம், ‘உங்களது முதல் பாலிவுட் படம் என்னுடைய தயாரிப்பில்தான் இருக்கும். நல்ல கதை கிடைத்தால் சொல்லுங்கள்’ என்றார்’ இவ்வாறு கூறினார்.
இதனையடுத்து அமீர்கான் தயாரிப்பில் பாலிவுட்டில் சிவகார்த்திகேயன் அறிமுகமாகவுள்ளதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.