இலங்கையில் வசித்து கொண்டு அமெரிக்காவில் தனது பெயரிலும் தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ஷ பாரிய சொத்துக்களை சேமித்திருக்கின்றார். முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் வெள்ளிக்கிழமை (03) வாக்குமூலமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவிலுள்ள சொத்துக்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் நான் எனது தெளிவுபடுத்தலை வழங்கினேன்.
இது தொடர்பில் எம்மிடமுள்ள சில எழுத்து மூல ஆவணங்களையும் நாம் சமர்ப்பித்திருக்கின்றோம். பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் எம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் அவரது சொத்து விபரங்கள் அதற்கு முரணானவையாகக் காணப்படுகின்றன. இலங்கையில் செய்த தொழிலில் பெற்றுக் கொண்ட பணத்தின் ஊடாக அவர் இவ்வாறு சொத்துக்களை சேகரித்திருக்கின்றார்.
நாம் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஏனைய தகவல்களையும் சேகரிப்பதே பொலிஸாரின் பொறுப்பாகும். விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டால் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது. பசில் ராஜபக்ஷ இரட்டைக் குடியுரிமை கொண்ட நபராவார். எனவே அர்ஜூன மகேந்திரனுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை விட பசிலுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையானதாக இருக்கும் என்றார்.