கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிஐடியினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வாகன சாரதியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் இன்று (03) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஜூன் 21 ஆம் திகதி வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மெய்பாதுகாவலரை பொலிஸார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான பிரபல சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸாரால் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு விசாரணையை மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அந்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், அமைச்சரின் வாகன சாரதி வெளிநாடு செல்லவிருந்தபோது, அவரை இக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை (2) பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று சிஐடியினர் முன்நகர்வுப் பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தினர்.
அதனையடுத்து, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், 3 வருடங்களுக்குப் பின்னர் சந்தேகத்தின் பேரில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.