முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சட்ட மாஅதிபர் கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
மேலும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்கு லண்டன் சென்று அரசாங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்கு அவசியமான நபர் என்று கூறப்படும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீதான பயணத் தடையைத் தளர்த்த வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இந்தக் கோரிக்கை இன்று (19) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், செயலாளரின் சார்பாக பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்களை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி, தனது மகளின் பிரசவத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டுப் பயணத் தடையைத் தளர்த்துமாறு செயலாளர் கோரியதாகத் தெரிவித்தார்.


