எதிர்வரும் வாரங்களில் நிகழவிருக்கும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு விளக்கங்களை தருகிறார் யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.நாகமுத்து பிரதீபராஜா.

கடந்த (08) அன்று எதிர்வுகூறியபடி வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக இலங்கைக்கு அருகில் காணப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடரும்.
மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி எதிர்வரும் 17 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் உருவாகும். அது கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நிலை கொள்ளும். இதனால் மீளவும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதன்பின் மீளவும் எதிர்வரும் 21 ஆம் திகதி அன்று இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இது தீவிரம் பெற்று ஒரு புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த புயலினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மிக கன மழை பெறும் என்பதோடு கடற்பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் பலத்த வேகத்தில் காற்று வீசக் கூடும். ( எனினும் இதனை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்). இந்த புயலுக்கு சென்வார் எனப் பெயரிடப்படும்.
இதனால் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே தற்போது கிடைக்கும் மழை ஒரு சில நாட்கள் தவிர்த்து எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடரும். குறிப்பாக நவம்பர் 17 முதல் 28 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆரம்பம் முதலே இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே கிடைக்கும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பட்சத்தில் இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை என்பது 2026 பெப்ரவரி வரை நீடிக்கும். ஆனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதியிலும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலும் மழையில்லாததனால் பலர் இம்முறை வடகீழ்ப் பருவமழை பொய்த்து விட்டதாக கூறுகிறார்கள். அது ஏற்புடையதல்ல.
இவ்வாண்டு நவம்பர் மாதத்தின் பினனரைப்பகுதியிலும் டிசம்பர் மாதம் முழுவதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பல நாட்கள் மழை நாட்களாக இருக்கும் என்பதோடு கணிசமான அளவு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது .
குறிப்பாக டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்து சமுத்திர பகுதிகளுக்கு முக்கியமாக வங்காள விரிகுடாவிற்கு மேடன் ஜூலியன் அலைவின் வருகை அமையும் என்பதனால் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதே போல் ஜனவரி 2026 இலும் 11 நாட்கள் மழை நாட்களாக அமையும்.
ஆகவே இம்முறை வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே இருக்கும்.


