புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியாட்சி முறைமைக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. பல தசாப்தகாலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்படுகிறது. இருப்பினும் எந்த அரசாங்கங்களும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கவில்லை.முதலாளித்துவ தரப்பினர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
யுத்தம் முடிவடைந்தவுடன் அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்தார். யுத்த வெற்றியை 2010 ஆம் ஆண்டு தேர்தலின் வெற்றிக்காக பயன்படுத்தினாரே தவிர நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பயன்படுத்தவில்லை.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இந்த நாட்டின் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தால் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளால் புதிய அரசியலமைப்பு குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இருப்பினும் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இனவாத அடிப்படையில் செயற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பேச்சளவில் கூட கவனம் செலுத்தவில்லை. தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயற்பட்டார்.
இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அரசாங்கத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நாட்டு மக்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது.
.இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஒரு தடவை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது நானும் சென்றிருந்தேன். புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,
தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.அப்போது சமஷ்டியாட்சியாட்சி முறைமை தொடர்பில் கேள்வியெழுப்பிய போது சமஷ்டியாட்சி முறைமையை தான் எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமான அரசியல் முறைமைக்கு முடிவுக் கட்டியுள்ளது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார். நாட்டு மக்களின் அரசியல் சிந்தனை மாற்றமடைந்துள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்.
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த கால தவறுகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக திருத்தியமைக்கப்பட வேண்டும் .அப்போது தான் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என்றார்.