இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை டில்லியில் உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்கள், போரின் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம், மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் இலங்கைக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்துள்ளனர். அத்தோடு தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை டில்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது, ‘இலங்கை – இந்திய உறவுகளை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதில் மன்மோகன் சிங் ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார்.
கடந்த சில வருடங்களாக அவரது உடல் நிலை ஆரோக்கியமானதாக இல்லாததால் நேரடியாக சந்தித்து பேச முடியாமல் போனது. இருப்பினும் இரு நாடுகளுக்குமான இழப்பாக அவரது மறைவை கருத முடிகிறது.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்ததன் பின்னர் 50 ஆயிரம் வீட்டு திட்டத்தை இலங்கைக்கு வழங்குவதில் அவர் முன்னின்று செயற்பட்டிருந்தார். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மன்மோகன் சிங்கின் சேவை என்பது முக்கியத்துவமுடையதாகக் காணப்பட்டது.
அதேபோன்று தான் தற்போதும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் உலக தரத்தை நோக்கி பயணிக்கிறது.
மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கையின் உள்ளகப் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த போரின் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம், மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்யிருந்தார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.’ எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரும் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில் ‘முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியுமாவார். அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைகிறோம். அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்தன. அவை முழு பிராந்தியத்திற்கும் ஒரு உத்வேகமாக அமைந்தன. முன்னேற்றம் மற்றும் நேர்மை மீதான அவரது அர்ப்பணிப்பு எமக்கு தொடர்ந்தும் ஊக்கமளிக்கும். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்காக இந்திய மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். நவீன இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியான ஒரு சிறந்த மனிதர், இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர்.’ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘மன்மோகன் சிங், ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமாவார். அவரது நுட்பமான தலைமையின் கீழ் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சியடைந்தது. அவரது நடைமுறைக் கொள்கைகள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழுமையை நோக்கிய பயணத்தை விரிவாக்கி , உலக அரங்கில் முடிவற்ற எழுச்சிக்கு களம் அமைத்தன.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.