Thursday, January 9, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்நாளை அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

நாளை அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் வன்கொடுமைகள் அன்றாடம் அரங்கேறி வருவதும். இதனை ஜனநாயக முறையில் தட்டிக் கேட்கும் எதிர்கட்சிகளை காவல்துறையின் இரும்புக் கரம் கொண்டு அடக்குவதும் இந்த அவலங்களை சமத்துவம், சமூக நீதி ஆட்சி என்று அன்றாடம் பறைசாற்றிக் கொள்வதும், திராட மாடல் ஆட்சியின் அன்றாட அவலம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அவலங்கள் பாலியல் சீண்டல்களை கண்டித்து நாளை (27-12-2024) வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்கள் மிகவும் பண்பானவர்கள். அமைதியானவர்கள். பொறுமை மிக்கவர்கள். கடந்த நான்கு ஆண்டுக்கால தி.மு.க. ஆட்சியில், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பெண் காவலர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

பெரும்பாலான குற்றங்களில், தி.மு.க.வினருக்குத் தொடர்பிருப்பதால், ஊடகங்களின் துணை கொண்டு, தி.மு.க. அரசால் அவை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தாங்கள் படும் இன்னல்களுக்குத் தீர்வு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

குற்றவாளிகளுக்கு அமைச்சர்கள் வரையிலான தொடர்புகளும், நெருக்கமும் இருப்பதால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தங்கள் பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்காமல், குற்றவாளிகள் தங்கள் கண்முன்னே சுதந்திரமாகச் சுற்றி வருவதைப் பார்த்து, தமிழக மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும், தமிழக பா.ஜ.க. சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற பிறகே, தி.மு.க. குற்றவாளிகளைக் கைது செய்கிறது காவல்துறை. பல நேரங்களில், பொதுமக்கள் தங்கள் பாதிப்புகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காமல், ஆளுங்கட்சியினரால் காவல் நிலையங்களில் வைத்தே மிரட்டி அனுப்பப்படுவதும் நடைபெறுகிறது. இந்தக் குற்றங்கள் வெளியே தெரிவதும் இல்லை.

தி.மு.க.வினர் என்பதால், நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே அவதூறு பரப்பும் வகையிலும், அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலில் தமிழகம் இருக்கிறது. இனியும் இதனை அனுமதித்தால், நம் சகோதர, சகோதரிகள், குழந்தைகள் எதிர்காலத்தில் இருள் சூழ்ந்து விடும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களை இன்னலுக்குள்ளாக்கி இருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த, தி.மு.க. அரசு அனுமதிப்பதில்லை. எங்களைக் கைது செய்து, பொதுமக்கள் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்று செயல்படுகிறது.

எனவே, திசைமாறிப் போன தி.மு.க. அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.

தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. சகோதர சகோதரிகள், அவரவர் இல்லத்திற்கு முன்பு நின்று, தி.மு.க. அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை மட்டும் பதிவு செய்வார்கள்.

சட்டம் ஒழுங்கு மீட்கப்பட்டு, மீண்டும் அனைவருக்கும் பாதுகாப்பான மாநிலமாக, குறிப்பாக நமது சகோதரிகள் அச்சமின்றி வாழும் மாநிலமாகத் தமிழகம் மாறும் வரை, தமிழக பா.ஜக. தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இவ்வாறு அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments