இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அதற்கடுத்த போட்டிகளில் மீண்டும் ரன் குவிக்க முடியாமல் போராடி வருகிறார். குறிப்பாக அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை தாரை வார்த்து வருகிறார். இதனால் அவர் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் 4-வது போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் விராட் கோலி சமீப காலமாக இப்படி ஆப் சைடில் வரும் பந்துகளில் ஆட்டமிழப்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா கூறுகையில், “நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறப்பான ஒரு வீரர். அவர் எப்படி ரன்களை சேர்க்க வேண்டும் என்ற வழியை நிச்சயம் கண்டு பிடிப்பார். யார் எங்கு பேட் செய்கிறார்கள்? எப்படி விளையாடுகிறார்? என்கிற கவலை உங்களுக்கு வேண்டாம். நிச்சயம் எங்கள் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்” என்று நச் பதிலளித்தார்.