இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் செயல்பாடுகள் சிறப்பானதாக அமையவில்லை. பேட்டிங் மட்டுமன்றி கேப்டனாகவும் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த நியூசிலாந்து தொடரில் ஓப்பனிங்கில் தடுமாறிய அவர் இந்தத் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். அந்த இடத்தில் அதை விட மோசமாக விளையாடும் அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாகவும் இருந்தார்.
இந்நிலையில் தாம் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். அதே சமயம் நன்றாக பயிற்சிகளை எடுத்து தயாராகி வரும் தாம் களத்தில் அதிக நேரத்தை செலவிட்டு விளையாடினால் பெரிய ரன்கள் தாமாக வரும் என்றும் ரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. அதை ஒப்புக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எனது மனதில் என்ன இருக்கிறது என்றும் எவ்வாறு தயாராகிறேன் என்பதும் எனக்குத் தெரியும். எனது தயாராகும் முறையில் அனைத்து கட்டங்களையும் நிரப்பியுள்ளேன். எனவே இவை அனைத்தும் களத்தில் முடிந்தளவுக்கு அதிக நேரத்தை செலவிடுவதை பற்றியதாகும். அதை என்னால் செய்ய முடியும் என்று உறுதியாக இருக்கிறேன்.
சில நேரங்களில் புள்ளி விவரங்கள் இவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்று சொல்லும். ஆனால் என்னை போன்ற நபருக்கு எனது மனதில் எப்படி உணர்கிறேன், எவ்வாறு தயாராகிறேன் என்பதே முக்கியம். உண்மையில் என்னைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன். தற்போதைய நிலையில் ரன்கள் அதை காண்பிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்குள் வித்தியாசமான உணர்வு இருக்கிறது” என்று கூறினார்.