கடந்த 17-12-2024 அன்று செவ்வாய்க்கிழமையன்று, ஸ்கார்பரோ – ரூஜ் பார்க்கின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜய் தணிகாசலம் தலைமையில் வாகனத் திருட்டு மற்றும் பொதுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி ஸ்காபரோவின் முதல் சமூகப் பாதுகாப்பு பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வானது, இணை அமைச்சர் மெக்ரிகர் மற்றும் ரொறன்ரோ பொலிஸ் சேவையின் 42 பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து, குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகத்தில் நடக்கும் குற்றங்களை நிவர்த்தி செய்யும் பிரதிநிதிகளிடம் தங்கள் கவலைகளை நேரடியாகக் கூற ஒரு வாய்ப்பை வழங்கியது.
இந்த குற்றங்கள் மிக நீண்ட காலமாக ஸ்கார்பரோவை பாதித்துள்ளன. “ஒன்ராறியோ அரசங்கமும் எங்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேவையான கருவிகளை வாங்க மில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளனர். எமது எல்லைப் பாதுகாப்பு சேவைகளை மேம்படுத்துவதும், பிணை முறையை சீர்திருத்துவதும் மத்திய அரசின் கடமையாகும். முதல்வர் டக் போர்ட்டும் எமது ஒன்ராறியோ மாகாண அரசும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொள்வது ஒரே விடயம் தான். இது போன்ற வன்முறைக் குற்றங்களை யாராவது செய்தால், அவர்கள் நீதியின் கதவு வழியாக விடுவிக்கப்படாமல், பூட்டி வைக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
குடியிருப்பாளர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் வன்முறைக் கடைக் கொள்ளைகளைக் கண்ட குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, துப்பாக்கி முனையில் வாகனங்கள் திருடப்படுவது மற்றும் கனடாவின் பலவீனமான பிணைச் சட்டங்கள், மீண்டும் மீண்டும் குற்றவாளிகளை வீதிகளில் திரும்ப அனுமதித்தல் போன்றன குறிப்பிடப்பட்டன.
விஜய் தணிகாசலம் அவர்கள், கடுமையான பிணைமீட்புச் சட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தினார், “மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அடுத்த நாள் அதே குற்றங்களைச் செய்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு பிணை சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். அனைவருக்கும் பாதுகாப்பான ஸ்கார்பரோவை உருவாக்க, குடியிருப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளிற்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான முக்கியமான படியை இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
கனடா உதயன் பத்திரிகை மற்றும் யுகம் வானொலி நிறுவனம் மற்றும் கிருஸ்ணா ரெலிகாஸ்ட் சேவை ஆகிய ஊடகங்கள் அங்கு தமிழர் சமூகம் சார்ந்தவையாக பங்குபற்றின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.