கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு கழிவுகளை கொட்டியதாக சுத்தமல்லியை சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜென்ட்டாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.