சென்னையில் இயக்குனர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்திற்கான பாராட்டு விழாவும், தற்போது அவர் இயக்கியுள்ள வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, விஜயகுமார், அருண் விஜய், சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இயக்குனர் பாலாவுக்கு நடைபெற்ற இந்த பாராட்டு விழாவின் போது நடிகர் சிவகுமாரும், சூர்யாவும் அவருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்தார்கள்.
சூர்யா பேசும்போது, சேது படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் தாக்கம் பல நாட்களாக இருந்தது. இந்த நிலையில்தான் 2000ம் ஆண்டில் நெய்க்காரன்பட்டியில் ஒரு படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. அப்போது பேசிய இயக்குனர் பாலா, எனது அடுத்த படத்தில் உன்னை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறேன் என்று சொன்னார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றியது. அவரது தொலைபேசி அழைப்பு 2000ம் ஆண்டில் வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.
நந்தா படத்தை பார்த்து விட்டு தான் கவுதம் மேனன், ‛காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன் பிறகுதான் என்னுடைய சஞ்சய் ராமசாமி இங்குதான் இருக்கிறார் என்று என்னை அழைத்தார் ஏ.ஆர். முருகதாஸ். இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் பாலா அண்ணன்தான். பாலா அண்ணன் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததுக்கு என்னுடைய அன்பும் மரியாதையும் எப்போதும் அவர் மீது இருக்கும்.
என்னுடைய வாழ்க்கையில் சிகரெட் பிடித்ததில்லை. நந்தா படத்திற்காகதான் சிகரெட் பிடித்து பழக வைத்தார். இயக்குனர் பாலாவை சார் என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. அண்ணன் என்று அழைத்தால் தான் பிடிக்கும். அவரை எப்போதும் நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். அதோடு நானும் அவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் எங்கள் இருவருக்கும் இடையிலான அன்பு மட்டும் ஒரு நாளும் குறையாது என்று பேசினார் சூர்யா.
அவரைத் தொடர்ந்து இயக்குனர் பாலா பேசும்போது , நான் சிகரெட் பிடிப்பேன் என்றாலும் சூர்யா முன்பு சிகரெட் பிடிக்க மாட்டேன். அதோடு நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து எல்லோரும் எனக்கு அட்வைஸ் செய்வார்கள். சூர்யா மட்டும்தான் நான் சிகரெட் பிடிப்பதை பார்த்து வருத்தப்பட்டார். அவர் ஒரு நடிகராக மட்டுமே இருந்திருந்தால் வருத்தப்பட்டு இருக்க முடியாது. உண்மையான அன்பு, தம்பி என்ற உறவுமுறை எங்களுக்குள் இருப்பதால் மட்டுமே அவரால் வருத்தப்பட முடிந்தது. என்னை விட என் மீது அதிகப்படியான அன்பு கொண்டவர் சூர்யாதான் என்று பேசினார் இயக்குனர் பாலா.
சூர்யாவும், பாலாவும் நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்த படம் ‛வணங்கான்’. படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்தது. ஆனால் படக்கதை விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னையால் இந்த படத்தை விட்டு சூர்யா விலகினார். இதையடுத்து வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்தார். வணங்கான் படத்தால் சூர்யா – பாலா இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் அதையெல்லாம் மறந்து பாலாவிற்காக இந்த விழாவில் பங்கேற்ற சூர்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.