திரை இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (14) தமிழக அரசு சார்பில் “சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு வாழ்த்தாக, உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவொன்றை வெளியிட்டார்.
அதில், சாஸ்திரிய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையிலான எல்லைகளை தனது இசையின் மூலம் உடைத்தவர் இளையராஜா என அவர் தெரிவித்தார்.
மேலும், திரையிசையைத் தாண்டி மேற்கத்திய செவ்வியல் இசையில் சிம்பொனி நிகழ்த்திய அவர், ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் புதுமைக்கான ஊக்கமாக உள்ளார் என்றார்.
அதேபோல், தமிழுக்கும் தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் இளையராஜா என வலியுறுத்திய ரஹ்மான், இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கிணைந்த மாமனிதராக அவரை விவரித்தார்.
இளையராஜாவுக்காக தமிழக அரசு நடத்திய பாராட்டு விழா, ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


