கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்ற மத்திய மாகாண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி நிதியம் தற்போது 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் ஒவ்வொரு பாடத்துறையிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னர் இந்த நிதியம் வரப்பிரசாதம் பெற்ற சில குழுக்களின் சலுகைக்காகவே தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது, மனித வள மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், இந்த நிதியம் மக்களுக்கே எளிதில் சென்றடையும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி நிதியம் மக்களின் உரிமை என்பதால் அதனை முறையாக மக்களிடம் ஒப்படைப்பது அரசின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, தகுதிகள் மட்டுமின்றி சமூக உணர்வுள்ள, நாட்டை முன்னேற்றும் மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார்.


