காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது.
ஆனால், வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை எதிர்த்து இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றாக முடியாது” எனக் கூறி, பலர் சமூக வலைத்தளங்களில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்போம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்றைய தினம் டிவியை அணைத்துவிட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், “ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் அல்லது வர்த்தக உறவு தேவையில்லை. இருநாடுகளுக்கிடையில் அரசியல், சமூக முன்னேற்றம் இல்லாத வரை கிரிக்கெட் போட்டிகள் நடக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.


