கொழும்பில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில், தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் செவ்வாயன்று புதிய கட்டண வசதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு தொடர்பான அபராதங்கள், வழக்கு கட்டணங்கள், முத்திரை வரி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்களை இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்த முடியும். இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பண பரிவர்த்தனைகள் எளிதாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கை நீதிமன்ற அமைப்பில் கட்டணங்களை தானியங்கிமயமாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதற்கட்ட முயற்சி என்றும், விரைவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த துவக்க விழாவில் நீதித்துறை சேவை ஆணைய உறுப்பினர்கள், இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜீவ் அமரசூரிய, நீதிமன்ற பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், நீதிமன்ற சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரைவுத் திட்டம் வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் முறையாகத் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.


