வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலிங்வூட் மாவத்தை பகுதியில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் நேற்று சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரிடமிருந்து 36 கிராம் கொக்கெய்ன், 203 கிராம் குஷ் போதைப்பொருட்கள், போதைப்பொருள் கடத்தலின் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,875,000 ரூபா பணம், 05 கையடக்கத் தொலைபேசிகள், பணம் எண்ணும் இயந்திரம், 02 வங்கி அட்டைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், கொலிங்வூட் மாவத்தை பகுதியில் 03 கிராம் 600 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளுடன் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களைச் சேர்ந்த 24, 25 வயதுடையவர்கள் ஆவர்.
கைதான மூவரும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.