Friday, January 10, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் எலிக்காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

தற்போது சடுதியாக அதிகரித்துவரும் எலிக்காய்ச்சல் நோயினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதனை தடுக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிராந்திய பணிமனையினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அறிவுறுத்தலின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாவது :

எலிக்காய்ச்சலால் உலகளாவிய ரீதியில் 10 இலட்சம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் 60,000 உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் ஒரு பாரதூரமான நோயாய் இதுவாகும்.

தற்போதைய பருவ மழையினை தொடர்ந்து எமது பகுதியிலும் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் சிலர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்துள்ளீர்கள். இந்நிலையில், எலிக்காய்ச்சல் அதாவது லெப்டோஸ்பைரோஸிஸ் எனப்படும் நோய் தாெடர்பில் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது.

இது லெப்ரோஸ்பைரா எனும் பற்றீரியாவால் விலங்குகள் மூலம் பரவும் கொடிய தொற்று நோயாகும். எலிகள், அகிளான் உட்பட கொறிப்பான்கள் மற்றும் கால்நடைகளின் சிறுநீருடன் வெளியேறும் பற்றீரியா கிருமித் தொற்றினால் இந்நோய் ஏற்படுகிறது.

வயல், சேற்று நிலங்களில் விலங்குகளின் சிறுநீர் மூலம் பற்றீரியா தொற்றிய தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்யும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தோலில் உள்ள காயங்கள், உராய்வுகள், கண், மென்சவ்வுகள் மூலம் நேரடியாகவும், விலங்குகளின் சிறுநீர் மூலம் தொற்றடைந்த உணவுகள், குடிநீர் மூலமும் இந்த நோய்க்கிருமி மனிதர்களுக்கு தொற்றுகிறது.

பின்பற்றவேண்டிய விடயங்கள்

* அவசியமற்ற சந்தர்ப்பங்களில் வயல் தண்ணீரில், சேற்று நிலங்களில் நிற்பதை தவிர்க்கவும்.

* வயல் நிலைகளை அண்டியுள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும்.

* வீடுகள், வயல் நிலங்களில் எலிகள் தங்காதபடி கற்குவியல்கள், குப்பைகூழங்களை துப்புரவு செய்யுங்கள்.

* கொதித்தாறிய தண்ணீரை பருகவும்.

* குடிநீர், உணவுப் பொருட்களுடன் எலிகள் தொடர்புபடும் சந்தர்ப்பங்கள் குறித்து அவதானமாக இருங்கள்.

* எலிக்காய்ச்சல் நோயானது கிருமித்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து இரண்டு நாட்கள் தொடக்கம் இரண்டு மூன்று வாரங்கள் வரையான காலப்பகுதியில் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

* காய்ச்சல், தலையிடி, வயிற்று நோவு, தசை நோவு, குமட்டல், வாந்தி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகள் டெங்கு போன்ற வேறு நோய்களுக்கும் பொதுவானவை என்பதனால் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியமானது.

* வயல், சேற்று நிலங்களில் வேலை செய்வது தொடர்பாக வைத்தியருக்கு தெரியப்படுத்துங்கள்.

* எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக விவசாயிகளுக்கு பற்றீரியா மாத்திரைகள் தற்போது சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

* உங்கள் பகுதிக்கான சுகாதார பணிமனை, சுகாதார பணியாளர்களை தொடர்புகொண்டு முற்பாதுகாப்பு மாத்திரைகள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு எலிக்காய்ச்சல் தொற்று நோய் தொடர்பில் பொது அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments