புதுவை கடற்கரை சாலையில் உள்ள அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
2012-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து ‘நானும் ரவுடிதான்’ படம் இயக்கினார். அப்படத்தின் போது நயன்தாராவின் காதல் ஏற்பட்டு, 2022-ம் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்ஜகே’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் விக்னேஷ் சிவன் நேற்று புதுவை சென்றுள்ளார். புதுவை சட்டசபை வளாகத்திற்கு சென்ற அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகல்ஸ்’ ஓட்டலை விலை பேசினார். இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிர்ச்சி அடைந்தார். அமைச்சர் அதற்கு அது அரசு சொத்து என்றார். உடனே விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டுள்ளார்.\
அதற்கு அமைச்சர், ‘புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார். அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது’ என்றார். தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், புதுவையில் கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு, புதுவையில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விக்னேஷ் சிவன், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்துள்ளோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். அதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினால் போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம்’ என்றார். இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் சிவன், துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.