தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா சாலை, மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வண்ணாரப்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு, பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சார்ஜா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூருக்கு உள்ளிட்ட 15 பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, திருச்சி, கோவை, கொச்சி புறப்படும் விமானங்களும் தாமதமாக செல்கின்றன. சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் மோசமான வானிலையால் வானில் வட்டமடித்து சுமார் 10 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை தாமதமாக தரையிறங்குகின்றன.