Thursday, November 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்7,000ஐ நெருங்கிய எலிக்காய்ச்சல் பாதிப்பு

7,000ஐ நெருங்கிய எலிக்காய்ச்சல் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 7,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் பருவமழை மற்றும் பெரும்போக விவசாயச் செய்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், எலிக்காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசனை சமூக வைத்திய நிபுணர் துஷாரி தபரேரா தெரிவிக்கையில், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 300 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நோயை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு சிகிச்சை பெறத் தவறினால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதிக பாதிப்புகள் பதிவான மாவட்டங்கள்

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான எலிக்காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்களாக இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், சேற்று நிலங்கள் மற்றும் நீர் தேங்கிய பகுதிகளில் பணியாற்றுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தொற்றுநோயியல் பிரிவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகமும் இணைந்து அறிவுறுத்தியுள்ளன.

பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், செப்டெம்பர் முதல் ஜனவரி வரையிலும் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறு பரவுகிறது எலிக்காய்ச்சல்?

எலிக்காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை பக்டீரியா தொற்றாகும்.

தொற்றுக்குள்ளான எலிகள் மற்றும் ஏனைய வீட்டு அல்லது காட்டு விலங்குகளின் சிறுநீரால் மாசடைந்த நீர் மற்றும் மண் ஊடாக இந்நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது.

மாசடைந்த நீர் அல்லது சேற்றுடன் தொடர்பு ஏற்படும்போது, உடலில் உள்ள காயங்கள், வெட்டுகள், சேதமடைந்த தோல் மற்றும் சளிச்சவ்வுகள் ஊடாக பக்டீரியாக்கள் உடலுக்குள் நுழையக்கூடும்.

குறிப்பாக வயல்வெளிகளில் பணியாற்றும் விவசாயிகள் மற்றும் வெள்ளநீரில் நடமாடுவோர் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

அறிகுறிகள் குறித்து அவதானம்!

எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் டெங்கு மற்றும் இன்புளுவன்சா காய்ச்சலின் அறிகுறிகளை ஒத்திருக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • காய்ச்சல்
  • உடல் வலி
  • தொண்டை வலி
  • கடுமையான தலைவலி
  • தசை வலி, குறிப்பாக கால்கள் மற்றும் பாதங்களில் வலி
  • கண்கள் சிவப்படைதல்

அதேவேளை, மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சிகிச்சை தாமதமாவது கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

வயல்வெளிகள் மற்றும் சேற்று நிலங்களில் பணியாற்றுவோர் பாதுகாப்பு காலணிகள் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உடலில் உள்ள காயங்களை நீர் புகாத வகையில் மூடிக்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் தடுப்பு மருந்துகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எலிக்காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்வதே கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான முக்கிய வழிமுறை என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments