சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரான இளைஞன் ஓமானில் இருந்து இன்றைய தினம் காலை 05.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரான இளைஞன் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 40,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 200 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 60 இலட்சம் ரூபா என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.


