Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்5-வது டெஸ்ட்: சிராஜ் அபாரம் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த இந்தியா

5-வது டெஸ்ட்: சிராஜ் அபாரம் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 34 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்தின் பென் டக்கெட்டும், பொறுப்பு கேப்டன் ஆலி போப்பும் பேட்டிங் செய்தனர். அரைசதத்தை கடந்த டக்கெட் 54 ரன்னிலும், ஆலி போப் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 106 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.

இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் கைகோர்த்தனர். இந்திய பந்துவீச்சை சமாளித்த இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர். ஹாரி புரூக் 111 ரன்களிலும், ஜோ ரூட் 105 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2 ரன்களுடனும், ஜேமி ஓவர்டான் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜேமி சுமித் (2 ரன்கள்) மற்றும் ஜேமி ஓவர்டான் (9 ரன்கள்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் காலி செய்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். அடுத்து வந்த ஜோஷ் டாங்கை பிரசித் கிருஷ்ணா போல்டாக்கினார்.

அடுத்து கடைசி விக்கெட்டாக காயம் காரணமாக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யாத கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். அவரது ஒத்துழைப்புடன் கஸ் அட்கின்சன் இங்கிலாந்தை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். சிராஜ் பந்துவீச்சில் ஒரு சிக்சர் அடித்து நெருக்கடியை சற்று தணித்தார். இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

இறுதியில் கஸ் அட்கின்சனின் (17 ரன்கள்) விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இது சிராஜின் 5-வது விக்கெட்டாக பதிவானது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments