டொராண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிரேட்டர் டொராண்டோ பகுதியெங்கும் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பலை குறிவைத்து நடத்திய விசாரணையின் போது, 34 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை Project Hydrogen எனப்படும் விசாரணையின் ஒரு பகுதி எனவும், இதில் 139 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் டர்ஹாம் பிராந்திய காவல்துறை சார்ஜெண்ட் பிராட் கார்னர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த கும்பலின் குற்றச் செயல்கள் டர்ஹாம் பகுதியைத் தாண்டி, வட ஒன்டாரியோ மற்றும் வின்னிப்பெக் வரை பரவியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படையாகக் காட்டி, குற்றச்செயல்கள் மூலம் செல்வம் பெற்ற கலாச்சாரத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் 10 சட்டவிரோத துப்பாக்கிகள், 2.7 மில்லியன் டொலர் மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் 200,000 டொலர் கனடிய நாணயம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


