நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் 22 மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடுமையான மின்னல் தாக்கம் காரணமாக உட்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படலாம் எனவும், வெளிப்புற நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களின் செயல்பாடுகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரங்களின் கீழ் ஒருபோதும் பாதுகாப்புத் தேட வேண்டாம், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்கவும், குளங்கள், ஏரிகள் மற்றும் ஏனைய திறந்த நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம், சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவும்.
அவசர உதவிகள் தேவைப்படுவோர் தத்தமது பகுதிகளுக்குப் பொறுப்பான அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


