விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும்.
அரிசிக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விலைக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவையாகும். எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் இந்த பிரச்சினை நிறைவடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆரம்பத்தில் அரிசி தட்டுப்பாட்டுடனேயே பிரச்சினை ஏற்பட்டது. ஜனாதிபதியும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரும் இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடினர்.
தம்மிடமுள்ள அரிசி தொகையை சந்தைகளுக்கு விநியோகிக்குமாறு நாம் பல சந்தர்ப்பங்களிலும் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தோம்.
எனினும் அதற்கான நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்படவில்லை. அதன் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு சில தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்பட்டது.
அதற்கமையவே 70 000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டு, அதற்கான விலைமனு கோரப்பட்டது. 5200 மெட்ரிக் தொன் அரிசி விரைவில் நாட்டை வந்தடையவுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20ஆம் திகதிக்கு பின்னர் உள்நாட்டில் அறுவடை செய்யப்படும் அரிசி சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும்.
விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில், அரசாங்கம் குறிப்பிட்டளவு அரிசியை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு தான் எஞ்சிய தொகையை சந்தைகளுக்கு விநியோகிக்கும்.
பாவனையாளர் அதிகாரசபையும் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. தற்போது பெரும்பாலான பகுதிகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு விலை தற்காலிகமானதாகும். இதனை தொடர்ச்சியாக பேணுவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.