ஜனாதிபதித் தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து அதன் வெற்றிக்காக பாடுபட்டோம். அவ்வாறிருக்கையில் எம் சார்பில் ஒருவருக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அதிருப்தியளிப்பதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (4) கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு களமிறங்குவது தொடர்பில் இன்றைய சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது. சிலிண்டர் தொடர்பில் அதிருப்தியுடனேயே இருக்கின்றோம். கிடைக்கப் பெற்ற இரு ஆசனங்களில் ஒன்றுக்கு தன்னிச்சையாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அக்கட்சியிலிருந்த பல சிரேஷ்ட பழைய அரசியல்வாதிகள் புதியவர்களுக்கு இடமளித்து அவர்கள் ஒதுங்கியுள்ளனர். அவ்வாறிருக்கையில் சிலிண்டரிலுள்ள உறுப்பினர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளமை அறுவெறுக்கத்தக்கது. எவ்வாறிருப்பினும் இளம் அரசியல்வாதிகள் இணைந்து எவ்வாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். அத்தோடு எஞ்சியுள்ள தேசிய பட்டியல் ஆசனம் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
இதேவேளை இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் அவர்கள் ஊடகங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்பர, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, முன்னாள் எம்.பி.பிரேம்நாத் சி தொலவத்த உள்ளிட்டோர் காஞ்சனவுக்கு நிச்சயம் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தியமை குறிப்பிடத்தக்கது.