வங்கக்கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயல், கடந்த 30-ந்தேதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக கொண்டு, புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. அப்போது, ‘பெஞ்சல்’ புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீட்டர், சூரப்பட்டு பகுதியில் 38 செ.மீட்டர், தர்மபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று காலை வலுக்குறைந்தது வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இந்த தாழ்வு பகுதியானது, இன்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன்காரணமாகவும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 8-ந்தேதி வரையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பாதிப்புகள் குறித்து அதில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.