விழுப்புரத்தில் பெய்த தொடர் கனமழையால் சாத்தனூர் அணையில் இருந்து 1.68லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, இருவேல்பட்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இதனால் அவர்கள் சாலைகளில் அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், தங்களை மீட்க யாரும் வரவில்லை எனவும், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து இருவேல்பட்டு அருகே விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இந்த நிலையில், சாலை மறியல் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் பொன்முடி அங்கு சென்றார். அப்போது காரில் இருந்தபடியே மக்களிடம் அமைச்சர் பொன்முடி குறைகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள், காரை விட்டு இறங்கி வரமாட்டீர்களா? எனக்கூறி அமைச்சர் பொன்முடி மீது சேற்றை எடுத்து வீசியுள்ளனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தைக்காக சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.