பீகார் மாநிலத்தை போதையில் இருந்து விடுவிக்கவும், போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டிசம்பர் 1-ம் தேதி (இன்று) ‘பாட்னா மாரத்தான் 2024’ என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதன் மையப்பொருள் “போதையில்லா பீகாருக்காக ஓடு” என்பதாகும். இதில் முழு மாரத்தான் (42.2 கிமீ), அரை மாரத்தான் (21.1 கிமீ), 10 கிமீ மற்றும் 5 கிமீ ஓட்டம் ஆகிய நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் கல்லூரி மாணவர்கள், இளம் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் மூத்த குடிமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த போட்டியை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பீகார் மதுவிலக்கு, கலால் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ரத்னேஷ் சதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய சாய்னா நேவால் கூறுகையில், “இதுபோன்ற நிகழ்வுகள் நோய்களில் இருந்து விலகி, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இதுபோன்ற மாரத்தான்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இதில் ஏராளமானோர் கலந்துகொள்வது ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பையும் சமூகத்தின் மீதுள்ள அக்கறையையும் காட்டுகிறது” என்று கூறினார்.