Thursday, December 5, 2024
spot_img
Homeஇந்திய செய்திகள்இவிஎம்-களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனை கோரிக்கை

இவிஎம்-களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனை கோரிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மறு தேர்தல் நடத்த எதிர்க்கட்சியான சிவசேனை(உத்தவ் தாக்கரே பிரிவு) கோரிக்கை முன் வைத்துள்ளது.

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு மிக பலத்த அடியைக் கொடுத்துள்ளது. சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன.

இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி 10, சமாஜவாதி 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சிவசேனை(உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(நவ. 25) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சுமார் 450 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், இவிஎம்-கள் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றுள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தல் முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்”.

“நாஷிக் பகுதியில் ஒரு வேட்பாளருக்கு வெறும் 4 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால் அவருடைய குடும்பத்தில் மொத்தம் 65 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கே வாக்கு செலுத்தியதாக தெரிவிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

டாம்பிவ்லி பகுதியில் இவிஎம்-மில் பதிவான மொத்த வாக்குகளை எண்ணும்போது குளறுபடி நிகழ்ந்துள்ளது. ஆனால் தேர்தல் அதிகாரிகள் இது குறித்த புகார்களை நிராகரித்துள்ளனர்.

ஓரிரு வேட்பாளர்கள் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் மக்கள் பணியில் புரட்சிகரமாக என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை? ஒரு கட்சியை விட்டு விலகி வேறொரு கட்சிக்கு அண்மையில் தாவியவர்கள்கூட, இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருப்பது தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றுள்ளதா என்ற வலுத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது.

சரத் பவார் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள்கூட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து முதல்முறையாக சந்தேகத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருக்கும்போது, இவிஎம்-கள் குளறுபடிகளை புறந்தள்ள முடியாது” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments