யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு அதானி குழுமம் ரூ,100 கோடியை வழங்கி இருந்தது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த தொகையை தெலுங்கானா அரசு நிராகரித்துவிட்டதாக அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரேவந்த் ரெட்டி,
யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்துக்காக பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. அந்த வகையில், அதானி குழுமமும் ரூ.100 கோடி கொடுத்தது. ஆனால், அந்த நன்கொடையை ஏற்க வேண்டாம் என மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
தெலுங்கானாவின் கவுரவம் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்கவும் எனக்கும் எனது அமைச்சரவை சகாக்களுக்கு உள்ள தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் அதானியின் நன்கொடையை நிராகரிக்க நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் யாரிடமும் கூட ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நாங்கள் நன்கொடையை ஏற்கவில்லை என்பதை அதானி குழுமத்துக்கு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம் என தெரிவித்தார். மேலும், கடிதத்தின் நகலையும் செய்தியாளர்களுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
அதானி குழுமத்திடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய அந்நிறுவனம் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து அந்நிறுவனம் நிதி திரட்டி உள்ளதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.