2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இதுவரை நடந்த தேர்தல்களை விட மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது.
எல்லா கட்சிகளும் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது? வாக்குகளை எப்படி அறுவடை செய்வது என்பது பற்றி திட்டம் தீட்டி வருகின்றனர். இவை எதையும் கண்டு கொள்ளாமல் கோட்டையை பிடிக்க போவது நான்தான் என்று விஜய் துணிச்சலோடு பயணித்து வருகிறார். அவர் எந்த நம்பிக்கையில் இப்படி சொல்கிறார். தேர்தலை சந்திப்பதற்கு அவர் கையில் எடுக்க போகும் வியூகங்கள் என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அதிரடியாக ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களின் பார்வையை அவரது பக்கம் இழுத்து வருகிறது.
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கி இறந்தது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதற்காக எல்லா கட்சிகளும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன. திருப்புவனம் சென்று அஜித்குமார் வீட்டில் போய் நின்று குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதே போல் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு விஜய் பல வியூகங்கள் வகுப்பார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க. கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் த.வெ.க. சார்பில் நடைபெற இருக்கிறது. த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல வாரியாக நகரங்கள், கிராமங்கள் என முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தி அதன் வாயிலாக த.வெ.க. திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


