நாட்டில் தற்போது 14 மாவட்டங்களில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை குறித்த ஊடக சந்திப்பில் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர பின்வரும் விடயங்களைக் கூறினார்.
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 30 வீதமானவை மண்சரிவுகள் ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் நாட்டின் 34 வீதமான மக்கள் தொகையினர் வாழ்கின்றனர்.
இந்த மொத்தப் நிலப்பரப்பின் அளவு சுமார் 20,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். டிட்வா சூறாவளியுடன் ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ள இடங்களைப் பரிசோதிக்குமாறு 2,710 கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
இவற்றில் இதுவரை 589 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம், 10 மீட்டருக்கும் அதிகமாக மண்சரிவு ஏற்பட்ட 1,241 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில், வீடுகளுக்குப் பாதிப்பு இல்லாத 919 மண்சரிவுகள் மற்றும் வீடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய 322 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்குக் கிடைக்கும் உடனடித் தகவல்களின் அடிப்படையில், 15,000க்கும் அதிகமான மக்கள் அபாயகரமான இடங்களிலிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தாங்கள் இருக்கும் நிலையைப் புரிந்துகொண்டு, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அங்கீகரிக்கப்படாத அல்லது வேறுவிதமான வீடுகள், கட்டிடங்களில் வசிப்பவர்கள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பல உயிர்கள் மண்மேடுகள் சரிந்ததாலேயே இழக்கப்பட்டன.
எனவே, பொதுமக்கள் இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


