டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கான சுங்க மேலதிகக் கட்டணம் (Customs Surcharge) நீக்கப்படுமா என்பது தொடர்பில் அப்போது நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் விலை மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் அவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமை எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், அதன் பின்னரே இவ்வாறான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.வாகன இறக்குமதியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தற்காலிக நடவடிக்கைகள் அவசியமானதாகின. அதன் ஒரு பகுதியாகவே சுங்க மேலதிகக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் இந்த மேலதிகக் கட்டணம் நீக்கப்படுமா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது என்றும், அப்போது நாட்டின் அந்நியச் செலாவணி நிலைமையை அடிப்படையாகக் கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர (Permit) முறையை மீண்டும் அறிமுகப்படுத்த முடியுமா எனக் கேட்கப்பட்டபோது, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அரச வருமானமும் மேலும் ஸ்திரமான நிலையை அடைந்த பின்னர் அவ்வாறான நடவடிக்கை குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என அவர் கூறினார்.


