Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யுத்த வெற்றியினால் தமிழ் மக்களுக்கே நன்மை

யுத்த வெற்றியினால் தமிழ் மக்களுக்கே நன்மை

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

17வது யுத்த வெற்றி தின நிகழ்வு தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டிற்கு அச்சமின்மையையும், தேசத்திற்கான உன்னத சுதந்திரத்தையும் பெற்றுத்தந்த மாபெரும் வெற்றி நாளுக்கு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதத்திற்கு எதிராக எமது வீரமிக்க இராணுவத்தினர் பெற்ற உன்னத வெற்றி, ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது.

உலகில் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதை உலகம் கண்ட முதல் சந்தர்ப்பம் அதுவாக கருதப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மகத்தான வரலாற்று யுத்த வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் உரித்தான வெற்றி அல்ல.

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் எமது சகோதர தமிழ் மக்களே ஆவர்.

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால், அப்பாவித் தமிழ் பிள்ளைகளின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடப்பட்டு, அவர்களின் கைகளில் பலவந்தமாகத் துப்பாக்கிகள் திணிக்கப்பட்ட ஒரு காலம் அது.

யுத்த வெற்றியின் பின்னர், சகோதர தமிழ் மக்களை அச்சுறுத்துவதற்கும், பலவந்தமாகப் பிள்ளைகளைப் பறித்தெடுப்பதற்கும் அந்த புலிகள் இப்போது இல்லை.

எமது இராணுவத்தினரின் அர்ப்பணிப்பால், இன்று வட பகுதி பிள்ளைகள் அனைத்துப் பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர்.

அவை, இந்த யுத்த வெற்றியின் மூலம் சகோதர தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளாகும்.

இன்று நாம் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும் வாழ்வதற்கும், உலக அரங்கில் இலங்கை ஒரு பாதுகாப்பற்ற பழங்குடி நாடாகக் கருதப்பட்ட நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதற்கும் இந்த யுத்த வெற்றியே காரணமாகும்.

இன்று நாம் கொண்டாடுவது, புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது இராணுவத்தினர் பெற்ற உன்னத வெற்றியை மாத்திரம் அல்ல.

ஒரு நாடாக நாம் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியையே ஆகும்.

யுத்த வெற்றியானது எமது ஒட்டுமொத்த வாழ்வையும் மனநிலையையும் மாற்றியமைத்துள்ளது. இனிமேலும் நாம் குண்டு பயத்துடன் வாழும், அந்தப் பயத்துடனேயே தொழிலுக்குச் செல்லும் ஒரு தேசம் அல்ல. நாம் பொதுவெளிகளில் கொண்டாட்டங்களை நடத்தப் அச்சப்படும் ஒரு தேசம் அல்ல.

மன்னாரில் இருந்து அநுராதபுரம் வரையிலான கிராமங்களில் உள்ள மக்கள், இரவைக் கழிப்பதற்காக வீடுகளைக் கைவிட்டுக் காடுகளுக்குள் தஞ்சமடையும் ஒரு தேசம் அல்ல.

இனிமேலும் நாம் குண்டு வெடிப்புக்குப் பயந்து பேருந்துகளிலும் ரயில்களிலும் ஏறும் ஒரு தேசம் அல்ல.

எமது கிராமங்களுக்கு இளம் இராணுவ வீரர்களின் சடலங்கள் வந்தடைவதில்லை. இனிமேலும் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதற்குப் அச்சப்பட போவதில்லை.

இனிமேலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினரால் பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி எமது நாட்டிற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களை ரத்து செய்ய முடியாது.

அவை, இந்த யுத்த வெற்றியின் மூலம் எமது தாய்நாடு பெற்றுக் கொண்ட வெற்றிகளாகும்.

யுத்த வெற்றி என்பது ஒரு நாடாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றியாகும்.

அதில் எமது பங்களிப்பை வழங்கி, நமக்காக நாம் பிரச்சாரத் திட்டத்தை முன்னெடுத்து, முப்படை இராணுவத்தினர் குறித்து சமூகத்தில் இருந்த பிம்பத்தை மாற்றியமைக்க முடிந்தமை, என் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

சுருக்கமாகக் கூறுவதாயின், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஆயிரக்கணக்கான வர்த்தக நாமங்களை கட்டியெழுப்பியுள்ள எனது தொழில்முறை வாழ்க்கையில், நான் மிகவும் திருப்தியடையும் ஒரு பணி இந்த ‘நமக்காக நாம்’ திட்டமே ஆகும்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மாத்திரமல்ல, எமது தாய்நாடு இருக்கும் வரை இந்த யுத்த வெற்றி கொண்டாடப்பட வேண்டும்.

அதில் பங்கேற்ற வீரர்களின் தியாகங்களும் வீரமும் போற்றப்பட வேண்டும்.

ஒரு நாகரீகமான மற்றும் நன்றியுணர்வுள்ள தேசத்தின் முதன்மையான பொறுப்பு அதுவேயாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments