மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தேர்தலை நடத்தி மாகாண அரசியல் தலைமைத்துவத்தை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளுடன் இணக்கமாக செயற்படுவோம். ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி, பதில் வருமாறு,
கேள்வி – உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் குறித்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வேட்புமனுத்தாக்கல் செய்த அரசியல் கட்சிகள், அரசியல் கூட்டணிகள் ஏதும் தற்போது செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் இல்லை. ஆகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த வேட்புமனுக்களை இரத்து செய்து, மீண்டும் வேட்புமனுக்கள் கோரும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் சட்டமூல வரைபு எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கேள்வி – மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் – மாகாண சபை தேர்தல் விடயத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தலை நடத்தி மாகாண அரசியல் தலைமைத்துவத்தை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். காணப்படும் சிக்கல்களுக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும்.
கேள்வி – மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகித்ததா?
பதில் – அவ்வாறு இல்லை. மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டிருந்தோம்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.
கேள்வி – இந்தியா – சீனா பூகோள அரசியல் இலங்கைக்கு தாக்கம் செலுத்துமா?
பதில் – அனைத்து நாடுகளுடன் இணக்கமாகவே செயற்படுவோம். ஏனெனில், புறக்கணிக்கப்பட்ட அரசியல் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிக்கவில்லை. அடுத்த மாதம் நடுப்பகுதியில் சீனாவுக்கு அரச முறை விஜயத்தை மேற்கொள்வேன்.
கேள்வி – வரவு – செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு பயனுடையதாக அமையுமா?
பதில் – 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தகுதியுடைய தரப்பினரை இலக்காக கொண்டு நிவாரண வழங்கல் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும். நிவாரணம் வழங்குவதன் ஊடாக மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.


