Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மத்திய மந்திரி அமித்ஷா 8-ம் தேதி மதுரை வருகை

மத்திய மந்திரி அமித்ஷா 8-ம் தேதி மதுரை வருகை

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் இந்த வாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருந்தாலும் இப்போதே எல்லா கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டதாக கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டு தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மதுரையில் கடந்த 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே அதிமுக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது. விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அவரது இந்த சுற்றுப்பயணம் மதுரை அல்லது கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நகர்ப்புறங்கள் கிராமப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரச்சார திட்டங்களைவகுக்குமாறு அதிமுக மூத்த தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முக்கியமானதாக கருதுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜக மேலிட தலைவர்களின் குறிக்கோளாக உள்ளது.

இந்தகுறிக்கோளை எட்டுவதற்காகவே அதிமுக-பாஜக கூட்டணியை கடந்த மாதம் சென்னைக்கு வந்து மத்திய மந்திரி அமித்ஷா உருவாக்கினார். இந்த கூட்டணியை மேலும் வலுவடைய செய்வதற்கு அவர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா தமிழகத்திற்கு வரவும் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக வருகிற 8-ம் தேதி மதுரைக்கு வர இருக்கிறார். அப்போது அவர் தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார். அன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் தென் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா தேர்தல் கூட்டணி, சட்டமன்ற தேர்தல் தொகுதிகள் வெற்றி விவரம், வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே திமுக பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில், அமித்ஷா வருவது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments