டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில், டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட ஏ.ஐ.127 என்ற விமானத்திற்கு ஆன்லைன் வழியே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று விடப்பட்டது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனடாவில் உள்ள இகுவாலூயிட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விமானத்தில் 20 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 211 பேர் பயணம் செய்தனர். இதற்கிடையில், பாதுகாப்பு விதிமுறைகளின்படி, மீண்டும் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. அந்த விமானத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில், விமானம் அவசரமாக தரையிறங்க உதவி செய்த இகுவாலூயிட் விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக இகுவாலூயிட் விமான நிலையத்தில் காத்திருக்கும் ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் 191 பேரை சிகாகோவிற்கு அழைத்துச் செல்ல கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 191 பயணிகளும் கனடா விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் சிகாகோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.