Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நைஜீரியாவில் 175 IS பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

நைஜீரியாவில் 175 IS பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

நைஜீரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் (IS) அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த தலைவர் உட்பட 175 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

 

இது தொடர்பாக நைஜீரியாவும் அமெரிக்காவும் உத்தியோகபூர்வ கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

உலகளவில் செயல்பட்டு வரும் “மிகவும் தீவிரமான பயங்கரவாதி” என்று அழைக்கப்படும், ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான தலைவர் அபு-பிலால் அல்-மினுகி (Abu-Bilal al-Minuki), வடகிழக்கு நைஜீரியாவின் தொலைதூர கிராமம் ஒன்றில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

 

இப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு முதல் போகோ ஹராம் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க கிளை ஆகியவற்றால் கடுமையான ஆயுதமேந்திய தீவிரவாதக் கிளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, கடந்த 17 ஆண்டுகால மோதல்கள் காரணமாக இதுவரை 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கப் படையினர் நைஜீரியாவிற்கு வருகை தந்தபோது, அவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குவதற்காக மட்டுமே அங்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த பிரம்மாண்ட கூட்டுத் தாக்குதலின் மூலம் அமெரிக்க இராணுவம் அங்குள்ள இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாகவும் தீவிரமாகவும் பங்கெடுத்து வருகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments