இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தால், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கனடா முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதியிடப்பட்ட உள்நாட்டு ஆவணத்தில், அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தாலி ட்ரூயின் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கனடாவின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒப்படைப்பு ஒத்துழைப்புப் பங்காளியாக இருப்பதால், கைது உத்தரவுகள் தொடர்பில் ஒத்துழைப்புக் கோரிக்கை கிடைத்தால், கனேடிய நீதிமன்றத்தில் கைது உத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் வெளியாவதற்கு முன்னதாக, குறித்த கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்ரூடோ அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆலோசனைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பின்னர் பிரதமர் பதவியை ஏற்ற மார்க் கார்னியும், ட்ரூடோவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர்.
எனினும், குறித்த கைது உத்தரவுகள் தொடர்பில் ஒத்துழைக்குமாறு கனடாவிடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளதா என்பது தொடர்பில், கனேடிய அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் செய்தி நிறுவனம் வினவியபோதும், செய்தி வெளியிடப்பட்ட நேரம் வரை பதில் கிடைக்கவில்லை.


