பிரான்ஸ் மற்றும் கனடா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் கனேடிய பிரதமர் மார்க் கார்னியும் இணக்கம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமடைந்துள்ள நிலையில், இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கனடா கடற்கரைக்கு அருகிலுள்ள பிரான்சின் Saint-Pierre-et-Miquelon தீவுக்கூட்டத்தில் நேற்று (20) இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியது.
பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சர்வதேச சட்டத்துக்கு மதிப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகம் உள்ளிட்ட பொதுவான கொள்கைகளைப் பகிர்ந்து கொள்வதாக மக்ரோன் தெரிவித்துள்ளார். மாறிவரும் சர்வதேச சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான காலம் இதுவென கார்னியும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது “Associate Member” நாடாக இணைவதற்கான முன்மொழிவுக்கு மக்ரோன் ஆதரவு தெரிவித்துள்ளார். கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான உறவுகளை மேலும் நெருக்கமாக்கும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் விண்வெளித் துறையில் கூட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், விண்வெளி ஏவுதளங்கள் மற்றும் தரைமட்ட கட்டுப்பாட்டு வசதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளன. பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, தொலைத்தொடர்பு, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தயாராகுதல், முக்கிய கனிமங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கனடாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஐரோப்பாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் கனடாவிடம் இருந்து கிடைக்கக்கூடிய எரிசக்தி வளங்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் அரசியல் பதற்றங்களின் பின்னணியிலேயே கனடா ஐரோப்பாவுடனான உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவது தொடர்பான அவரது தொடர்ச்சியான கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், பிரான்ஸ்–கனடா பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மட்டுமன்றி, கனடாவின் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் எதிர்வரும் நாட்களில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரின்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


