ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் டுபாயில் கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக் நாடு கடத்தப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் டுபாயில் கைது
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, டுபாயில் வர்த்தக வளாகமொன்றில் இருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது தொலைபேசியில் ஈரான் தொடர்பான தாக்குதல் காணொளிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரை டுபாய் பொலிஸார் ஈரானுடனான தொடர்புகள் குறித்து தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை முன்னதாக நீக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


