Sunday, October 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கொல்கத்தாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொல்கத்தாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொல்கத்தாவின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதுடன் 35 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மேற்கு வங்க மாநில அரசு இந்திய மதிப்பிலான ரூ.25 இலட்சமும், மத்திய அரசு இந்திய மதிப்பிலான ரூ.2 இலட்சமும் நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் நேற்றிரவு(17) பலத்த மழை காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பலத்த மழையின் போது மக்கள் கூட்டம் திடீரென முண்டியடித்த காரணத்தால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த கொல்கத்தா பொலிஸார், அந்த பகுதியின் சிசிரிவி காட்சிகளைப் சேகரித்து பெற்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து, தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியவர் மீது கடுமையான நடவடிக்கையும் ஆரம்பித்துள்ளது.

இச்சம்பவத்தில் இதுவரை 12 பேரை தங்கள் காவலில் எடுத்துள்ள பொலிஸார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பூஜை கமிட்டி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொலிஸார், தற்காலிக ஊர்க்காவல் படையினர் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரியும் தனது உயர் அதிகாரிகளுடன் வந்து சேர்ந்தார். அங்கு கள சூழலை அறிந்த பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்றார். அங்கு நள்ளிரவு வரை இருந்தார். சம்பவம் மீது சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்படும் என முதல்வர் சுவேந்து அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் சுவேந்து, “இந்தச் சம்பவத்தில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது. இதன் விசாரணையில் சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் இடம்பெறும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.25 இலட்சம் நிதியுதவியும், அரசுப் பணியில் ‘குரூப்-டி’ நிலையிலான வேலையும் வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாநகரக் காவல் ஆணையர், பொலிஸ் தலைமை இயக்குநர், மாநில அமைச்சர் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசல் போன்ற சூழல் குறித்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

“சர்பகான் பூஜா பந்தலில் ஏற்பட்ட நெரிசல் குறித்த செய்தியறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான மன வலிமையும் தைரியமும் கிடைக்கட்டும் என்று அன்னை துர்கையிடம் வேண்டிக்கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments