கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் திறந்தவெளி தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 முதல் 15 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நரினோ மாகாணத்தின் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பகுதிக்கு செல்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் தகவல் தொடர்பு தடைகள் காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் நிலவுவதாகவும் நரினோ மாகாண பேரிடர் மீட்பு அதிகாரி ஜார்ஜ் டோவர் காஸ்டிலோ தெரிவித்துள்ளார்.
முறைசாரா சுரங்கத்தில் விபத்து
அடர்ந்த மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ள சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியை படகு அல்லது சிறிய விமானம் மூலமாகவே சென்றடைய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் முறையான அனுமதியின்றி இயங்கிய சுரங்கம் என நரினோ மாகாண ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் அரசாங்க அனுமதியின்றி இயங்கும் பல சிறிய சுரங்கங்கள் காணப்படுவதுடன், அவற்றில் சில ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை
குறித்த பகுதியில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்படுவதால், மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிப் பணிகளை முன்னெடுப்பதில் பாதுகாப்பு சவால்களும் நிலவுகின்றன.
2016ஆம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் இணங்காத முன்னாள் FARC உறுப்பினர்களால் வழிநடத்தப்படும் ஜாகோபோ அரேனாஸ் பிரிவு உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்கள் அப்பகுதியில் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு அனுமதி வழங்குமாறு அப்பகுதியில் செயற்படும் ஆயுதக் குழுக்களிடம் கொலம்பியாவின் குறைதீர்ப்பாளர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயிர்களைக் காப்பாற்றுதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் அவசரநிலைக்கு விரைவாகப் பதிலளித்தல் ஆகியவை தற்போதைய முதன்மை நோக்கங்களாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


