கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் குடியேற்றக் கொள்கை தொடர்பாக ஐந்து முக்கிய கேள்விகள் வாக்கெடுப்பில் முன்வைக்கப்படவுள்ளன.
மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தின் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்விகள், பொருளாதாரக் குடியேற்றம், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலச் சேவைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளன.
இதன்படி, பொருளாதாரக் குடியேற்றம் தொடர்பில் மாகாண அரசாங்கத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து வாக்காளர்களிடம் கேட்கப்படவுள்ளது.
அத்துடன், மாகாண அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும் சேவைகளை கனேடியப் பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் ஆல்பர்ட்டா அங்கீகரிக்கும் குடியேற்ற நிலை கொண்டவர்களுக்கு மட்டுப்படுத்த வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தற்காலிகக் குடியேறிகள் சுகாதார மற்றும் கல்விச் சேவைகளைப் பெறுவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா என்பதும், சமூக நல உதவிகளைப் பெறுவதற்கு குறைந்தது 12 மாதங்கள் ஆல்பர்ட்டாவில் வசித்திருக்க வேண்டுமா என்பதும் ஏனைய கேள்விகளாகும்.
மேலும், மாகாணத் தேர்தல்களில் வாக்களிப்போர் தமது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்றும் வாக்காளர்களிடம் கேட்கப்படவுள்ளது.
இந்த முன்மொழிவுகள் ஆல்பர்ட்டாவில் வாழும் குடியேற்றச் சமூகத்தினர் மத்தியில் கவலையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


