Friday, July 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிளிநொச்சி கூட்ட குழப்பநிலை குறித்து வினவிய ஜனாதிபதி

கிளிநொச்சி கூட்ட குழப்பநிலை குறித்து வினவிய ஜனாதிபதி

கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தம்மிடம் தொலைபேசியில் வினவியதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித்திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு இன்று (17.07.2026) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

அமைச்சின் செயலாளர் மு. நந்தகோபாலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி வைத்தார்.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 130 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் பெண் தொழில் முயற்சியாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர். அவர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடு வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை எனக்குத் தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திப் பேசினார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட சலசலப்பு காரணமாக அக்கூட்டம் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பேசுபொருளாக மாறியது.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நான் தாக்க முயன்றதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், நான் அவ்வாறான ஒரு நபர் அல்லன். யாருடனும் சண்டை போடுவதோ அல்லது மோதல்களில் ஈடுபடுவதோ எனது குணம் கிடையாது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அங்கு நடந்த உண்மையான நிலைமைகளைத் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments