கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலைச் சேர்ந்த“லொக்கு பெட்டி” என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்பவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.
கிளப் வசந்த என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த போது சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், “லொக்கு பெட்டி” என்பவர் பெலரூஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் 04ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.
இதனையடுத்து “லொக்கு பெட்டி” என்பவரை 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், “லொக்கு பெட்டி” என்பவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளதால் அவர் இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, “லொக்கு பெட்டி” என்பவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


