கனடாவின் பல நகரங்களில் புதிய மேயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சில நகரங்களின் தற்போதைய மேயர்கள் மீண்டும் வெற்றிபெற்று தமது பதவிகளைத் தக்கவைத்துள்ளனர்.
குறிப்பாக, வான்கூவர், பிரின்ஸ் ஜோர்ஜ் மற்றும் கம்லூப்ஸ் உள்ளிட்ட நகரங்களில் மேயர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், சில நகரங்களில் தற்போதைய மேயர்களுக்கு வாக்காளர்கள் மீண்டும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
பர்னபி நகர மேயர் மைக் ஹர்லி, சுமார் 29,000 வாக்குகளைப் பெற்று வசதியான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தைப் பெற்ற ஹெய்மன் யிப் பெற்ற வாக்குகளைவிட இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
அதேவேளை, வடக்கு வான்கூவர் மாவட்டத்தின் மேயர் மைக் லிட்டில், ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின்படி 51 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றியடைந்துள்ளார்.
அபோட்ஸ்ஃபோர்ட் நகரில் ரொஸ் சீமென்ஸ் 62 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியுள்ளார்.
வான்கூவர் தீவுப் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் லியோனார்ட் க்ரோக் மற்றும் சாரா லவ்குரோவ் இடையே நெருக்கமான போட்டி நிலவியது. இதில் 10,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற லியோனார்ட் க்ரோக் வெற்றிபெற்றார். சாரா லவ்குரோவ் 8,400 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பல நகரங்களில் தற்போதைய மேயர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த முடிவுகள் கனடாவின் உள்ளூராட்சி அரசியலில் ஒரே மாதிரியான மாற்றம் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.


